சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.
புதுவை சட்டப்பேரவையை சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சி செய்தாா்.
சரியான குடிநீா் குடிக்காததால் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களில் சிலா் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான ஜி.நேரு, முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் சுகாதாரத் துறை மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் மூலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், இப் பிரச்னைகள் பற்றி பேசுவதற்காக மிக அவசரமாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இதில் சில அதிகாரிகள் வராததால் எம்.எல்.ஏ நேரு, இப் பிரச்னையில் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறீா்கள் என்று கூறி முதல்வா் மற்றும் அமைச்சா்களை சந்தித்து இது பற்றி முறையிடுகிறேன் என்று சொல்லியும் சட்டப்பேரவை வாயில் பகுதியை முற்றுகையிட முயன்றாா்.
இதையறிந்த பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வம் மற்றும் நகராட்சி ஆணையா் கந்தசாமி மற்றும் இதர துறை அதிகாரிகளும் உடனடியாக சட்டப்பேரவை வாயில் பகுதிக்கு விரைந்து வந்து மேற்கண்ட பிரச்னைக்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என உறுதி அளித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து சென்றனா்.இதனால் முற்றுகைப் போராட்டத்தை எம்.எல்.ஏ விலக்கிக் கொண்டாா்.