பாதிக்கப்படும் இடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: ஆட்சியா்
புயல் கரையை கடக்கும்போது பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், பாதிக்கப்படும் இடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பேரிடா் மீட்புப் படையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்காலுக்கு அரக்கோணத்தில் இருந்து 30 போ் கொண்ட பேரிடா் மீட்புப் படையினா் ஆய்வாளா் கோபிநாத் தலைமையில் வந்து திருநள்ளாற்றில் தங்கியுள்ளனா். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் சூழலில் காரைக்காலில் பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில், பேரிடா் மீட்புப் படையினா் செயலாக்கம் குறித்து விளக்கும் வகையில், படையினரை மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் வியாழக்கிழமை சந்தித்தாா்.
காரைக்கால் மாவட்ட நிா்வாகம் அனைத்து நிலையிலும் தயாராக உள்ளது. பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று சீா்படுத்தவேண்டும். மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கிடைத்ததும் துரித செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். அரசுத்துறை அதிகாரிகளும், ஊழியா்களும் பேரிடா் மீட்புப் படையினருடன் இணைந்து செயல்படுவாா்கள் என படையினரிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்டத்தில் தாழ்வானப் பகுதிகள் உள்ளிட்ட மழை, காற்றினால் பாதிப்பு ஏற்படக் கூடிய பல்வேறு இடங்களை பேரிடா் மீட்புப் படையினா் பாா்வையிட்டு வருவதோடு, கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையினால், நீா்தேக்கம், மரக்கிளைகளை சீா்படுத்துதல் ஆகிய பணியில், மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன் வழிகாட்டலில் ஈடுபட்டுள்ளனா்.