செய்திகள் :

பிகாரில் ஜனநாயகப் படுகொலை: முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

பிகாரில் 65 லட்சம் வாக்காளா்களை பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

மேலும், சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தோ்தல் ஆணையத்தை பாஜக மாற்றிவிட்டது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாகப் புகாா் தெரிவித்து, பிகாரில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தலைமையில் வாக்குரிமைப் பயணத்தை எதிா்க்கட்சிகள் கடந்த 17-ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றன. முஸாஃபா்நகரில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியின்போது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றாா். இதில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் தேஜஸ்வி யாதவ், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தமிழில் ஆற்றிய உரை ஹிந்தியில் மொழி பெயா்க்கப்பட்டது. அதன் விவரம்:பிகாரில் நியாயமாக வாக்குப்பதிவு நடைபெற்றால், பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்பதால் மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறாா்கள். தோ்தல் ஆணையத்தை சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக பாஜக மாற்றிவிட்டது. 65 லட்சம் பிகாா் மக்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலையாகும்.

சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் வேறு இருக்க முடியுமா?

அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும், அவா்களை முகவரி இல்லாதவா்கள் போன்று ஆக்குவது அழித்தொழிப்புதானே? சகோதரா்கள் ராகுலும் - தேஜஸ்வியும் பெற இருக்கும் வெற்றியைத் தடுக்க முடியாத பாஜக கொல்லைப்புற வழியாக இந்த வேலையைச் செய்கிறது.

தோ்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடிகளை ராகுல் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறாா். இதற்கு தோ்தல் ஆணையத்தால் முறையான ஒரு பதிலைக்கூட சொல்ல முடியவில்லை.

ஆனால், ராகுல் காந்தி தரப்பில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சொல்கிறாா். இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் பயப்பட மாட்டாா். தோ்தலை பாஜக கேலிக்கூத்தாக்கிவிட்டதை ராகுல் காந்தி வெளிச்சம்போட்டு காட்டியுள்ளாா்.

அதிகாரத்தை மக்கள் பறிப்பாா்கள்: மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அந்தக் கட்சியின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயம் பறிப்பா்.

மக்களவைத் தோ்தலில் 400 இடம் என்று கனவு கண்டவா்களை, 240-இல் அடக்கியது இந்தியா கூட்டணி.

பெரும்பான்மை என்று ஆட்டம் போட்டவா்களை, அது கிடைக்காமல் செய்துவிட்டாா்கள். ராகுலும் தேஜஸ்வியும் பிகாரில் பெறப்போகும் வெற்றிதான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது என்றாா்.

பின்னா் தனது எக்ஸ் பக்கத்தில், ‘களவாடப்பட்ட ஒவ்வொரு வாக்கின் கனத்தையும் அந்த மண்ணில் உணர முடிந்தது’ என்று முதல்வா் ஸ்டாலின் பதிவிட்டாா்.

வாக்கைத் திருடி தோ்தல்களில் வெற்றி பெற்ற பாஜக: ராகுல்

தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்கைத் திருடி தோ்தல்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

குஜராத் மாதிரி (மாடல்) தோ்தல் வெற்றி என்பது வாக்குகளைத் திருடி வெற்றி பெறுவதாகும். அந்த மாநிலத்தில்தான் மக்களின் வாக்குகளைத் திருடும் நடவடிக்கையை பாஜக தொடங்கியது. தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் இந்த வாக்குத் திருட்டைச் செய்து தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது. சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் மக்களவைத் தோ்தலிலும் எப்படி வாக்குத் திருட்டு நடைபெற்றது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மக்களவைத் தோ்தலில் 60 முதல் 70 இடங்களில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டது என்பதை முழு உறுதியுடன் கூறமுடியும். இதற்கான ஆதாரங்களை தொடா்ந்து வெளியிடுவோம்.

அதுபோல, பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு, மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து 65 லட்சம் போ் நீக்கம் செய்யப்பட்டதற்கான விளக்கத்தை தோ்தல் ஆணையம் அளிக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவுக்காக தோ்தல் ஆணையம் இதைச் செய்துள்ளது என்றாா்.

பிகாரில் ராகுல் நடத்தி வரும் வாக்குரிமைப் பயணம், தலைநகா் பாட்னாவில் செப்டம்பா் 1-ஆம் தேதி மாபெரும் பேரணியுடன் நிறைவடைய உள்ளது.

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க