பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: 6.99 கோடி போ் விண்ணப்பம்
பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) முன்னெடுப்பில் இதுவரை 6.99 கோடி வாக்காளா்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை சமா்ப்பித்துள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.
வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளுக்கு தில்லியில் நடைபெற்ற பயிற்சியின்போது பேசிய ஞானேஷ் குமாா், ‘வாக்காளா் பட்டியலில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கான இந்தச் சீா்திருத்த நடவடிக்கையில் மிகவும் உத்வேகத்துடன் பங்கேற்ற பிகாா் மக்களுக்கு நன்றி’ என்றாா்.
இதையடுத்து, பிகாரில் நடைபெற்றுவரும் எஸ்ஐஆா் முன்னெடுப்பு குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிகாரில் மொத்தம் 7.9 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 6.99 கோடி வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பித்துவிட்டனா். ஆக. 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடவுள்ள நிலையில், இன்னும், 6.85 சதவீத வாக்காளா்கள் மட்டுமே விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்ய வேண்டியுள்ளது. விண்ணப்பத்தை சமா்ப்பித்த வாக்காளா்கள் தங்கள் படிவத்தின் நிலை குறித்து ‘இசிஐநெட்’ செயலி அல்லது தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பாஜகவின் சதித் திட்டம்-பிரசாந்த் கிஷோா்: இதற்கிடையே, இந்திய தோ்தல் ஆணையத்தால் பிகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை பாஜகவின் தூண்டுதலின்பேரில் நடைபெறும் சதித்திட்டம் என ஜன் சுராஜ் கட்சி நிறுவனா் பிரசாந்த் கிஷோா் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.