பிரசவ வலியில் தண்டவாளத்தில் படுத்த கர்ப்பிணி யானை - 2 மணிநேரம் ரயில் சேவையை நிறுத்திய அதிகாரிகள்
ஜார்க்கண்ட் மாநிலம் அதிக வனப்பகுதி கொண்ட மாநிலம் ஆகும். அங்கிருந்து அதிக அளவில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. நிலக்கரி எடுத்துச்செல்லும் ரயில்களுக்காக அங்குள்ள பார்ககானா மற்றும் ஹசரிபாக் இடையே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் சரக்கு ரயில்கள்தான் செல்லும்.
இந்த வழித்தடத்தில் அடிக்கடி வனவிலங்குகள் தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம். இந்த வழித்தடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் கர்ப்பிணி யானை ஒன்று பிரசவ வலியில் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டது. அந்த யானையால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. பிரசவ வலியில் அந்த யானை பிளிற ஆரம்பித்தது. இதனை கவனித்த அப்பகுதி வனத்துறை ஊழியர் இது குறித்து உடனே ரயில்வே கட்டுப்பாட்டு அறையை உஷார்படுத்தினார்.

சரக்கு ரயில் நிறுத்தம்
பின்னர் யானைக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டது. இது குறித்து ராம்கர் வனத்துறை அதிகாரி நிதிஷ் குமார் கூறுகையில், ''அதிகாலை 3 மணிக்கு ரயில் தண்டவாளத்தில் பிரசவ வலியில் யானை ஒன்று படுத்திருப்பதாக எனக்கு வனத்துறை காவலர் ஒருவர் தெரிவித்தார். அதோடு அப்படியே விட்டால் அந்த வழியாக வரும் ரயில் யானை மீது மோத வாய்ப்பு இருப்பதாகவும், எனவே அந்த வழியாக வரும் ரயில்களை நிறுத்தும்படியும் கேட்டுக்கொண்டார். நானும் உடனே அப்பகுதியில் உள்ள பார்ககானா ரயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தேன். உடனே ரயில்வே அதிகாரிகள் அந்த வழியாக வந்த சரக்கு ரயிலை நிறுத்தி வைத்தனர்.
சரக்கு ரயில் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளத்தில் படுத்திருந்த யானைக்கு சுக பிரசவம் ஏற்பட்டது. தாயும், சேயும் பத்திரமாக ரயில் தண்டவாளத்தில் இருந்து கிளம்பி சென்ற காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. யானை சென்ற பிறகு சரக்கு ரயில் அந்த வழியாக கிளம்பிச் சென்றது''என்றார்.
இக்காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடிக்கடி யானைகள் மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் நடந்து வருகிறது. அதோடு மின்சாரம் தாக்கியது உட்பட பல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டில் 30 யானைகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.