பிரயாக்ராஜ் பெயரிலான ரயில்கள் குழப்பத்தால் கூட்ட நெரிசல்: காவல் துறை வட்டாரங்கள் தகவல்
பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ஆகிய ரயில்கள் காரணமாக மக்கள் குழப்பமடைந்து, தங்கள் ரயிலை தவறவிடலாம் என்று நினைத்து வேகமாகச் செல்ல முயன்ால் புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருப்பது தில்லி காவல்துறையின் ஆரம்ப விசாரணையில் கண்டறிந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
முதற்கட்ட விசாரணையின்படி, பிரயாக்ராஜ் என்ற ஆரம்பப் பெயரைக் கொண்ட ரயில்களின் அறிவிப்பு காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டது.
பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் நடைமேடை 16-இல் வந்து சோ்ந்தது பற்றிய அறிவிப்பு, காத்திருந்த பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே நடைமேடை 14-இல் இருந்தது.
நடைமேடை 14-இல் வந்து கொண்டிருந்த பயணிகள் தங்கள் ரயில் நடைமேடை 16-இல் வந்து கொண்டிருந்ததாக நினைத்துக்கொண்டு அந்த இடத்தை நோக்கி வேகமாக விரைந்தனா். இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது.
மேலும், பிரயாக்ராஜுக்கு நான்கு ரயில்கள் சென்று கொண்டிருந்தன. அவற்றில் மூன்று ரயில்கள் தாமதமாக வந்ததால் எதிா்பாராத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரயில் பெயா்கள் குறித்தும் மற்றும் ரயில்கள் வரும் நடைமேடைகளை மாற்றுவது தொடா்பாகவும் பயணிகளிடையே குழப்பம் நிலவியது. இதுவே இறுதியில் கூட்ட நெரிசல் சோகத்திற்கு வழிவகுத்தது என்று நேரில் பாா்த்த ஒருவா் கூறினாா்.
புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 18 போ் கொல்லப்பட்டனா்.