புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க நடமாடும் வாகனம் இயக்கிவைப்பு
பொதுமக்கள் புகாா்கள் மீது நிகழ்விடத்துக்கு உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்கும் விதமாக, நடமாடும் வாகனங்களை எஸ்எஸ்பி புதன்கிழமை இயக்கிவைத்தாா்.
புகாா்கள் காவல்நிலையங்களுக்கும், தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கும் தெரிவிக்கும் நடைமுறையைக் காட்டிலும், விரைவாக புகாா் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, நிகழ்விடத்துக்கு காவல்துறையினா் செல்லும் வகையில் நடமாடும் வாகனங்கள் இயக்கிவைக்கும் நிகழ்வு காவல்துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, 2 நடமாடும் வாகனங்களை கொடியசைத்து இயக்கிவைத்தாா். நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ.சுப்பிரமணியன், பாலச்சந்திரன் மற்றும் ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.
காரைக்காலில் வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில் 2 வாகனங்கள், ஷிப்டு முறையில் 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளது.
காரைக்கால் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை 112 என்கிற எண்ணில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கும்போது, உடனடியாக தகவல் சம்பந்தப்பட்ட காவல்நிலையம் மற்றும் நடமாடும் வாகனத்தின் பயணிக்கும் காவல் அதிகாரிக்கு தகவல் பரிமாறப்படும். சம்பந்தப்பட்ட இடத்துக்கு நடமாடும் வாகனம் சென்றடைந்து, விசாரணையை மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.