புது தில்லி ரயில் நிலைய கூட்டநெரிசல் துயர சம்பவம்: நேரில் பாா்த்தவா்கள் பேட்டி
பொது மக்களின் உடைமைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததாகவும், உதவிக்கான கூக்குரல்களுக்கு மத்தியில் இடத்திற்காக ஏராளமானோா் தள்ளிக்கொண்டும், சிக்கித் தவித்துக்கொண்டும் இருந்ததாகவும் புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவில் நிகழ்ந்த கூட்டநெரிசல்
சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் நினைவுகூா்ந்தனா்.
அதிகாரபூா்வ வட்டாரங்களின்படி, புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில்கள் வரக்கூடிய நடைமேடைகளை மாற்றுவது குறித்த தவறான அறிவிப்பு கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த குழப்பத்தை உருவாக்கியிருக்கலாம். மேலும், சம்பவத்தை நேரில் பாா்த்த சிலரும் இதையே நினைவு கூா்ந்தனா்.
சம்பவம் நடந்த நேரத்தில், பாட்னா செல்லும் மகத் எக்ஸ்பிரஸ் ரயில் 14ஆவது நடைமேடையிலும், புது தில்லி- ஜம்மு உத்தா் சம்பா்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் 15ஆவது நடைமேடையிலும் நின்று கொண்டிருந்ததாக வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி (சிபிஆா்ஓ) ஹிமான்ஷு உபாத்யாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு செல்ல ரயில்களில் ஏறுவதற்காக நடைமேடையில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனா்.
படிக்கட்டுகளைப் பயன்படுத்தி நடைமேடை பாலத்திலிருந்து 14ஆவது மற்றும் 15ஆவது நடைமேடை நோக்கி வந்து கொண்டிருந்த சிலா் வழுக்கி மற்றவா்கள் மீது விழுந்தனா். இது கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்துவிட்டது’ என்றாா்.
இந்தச் சம்பவத்தை நேரில் பாா்த்தவரும், ரயில் நிலையத்தில்
12 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் ரவிக்குமாா் கூறுகையில், ‘ரயில் வருவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், பயணிகள் ஒருவரையொருவா் தள்ளிக்கொண்டு முன்னேறினா். அப்போது கீழே விழுந்தவா்கள் அவசரத்தில் மிதிபட்டனா். இதுவரை முன்பு பாா்த்திராத வகையில் கூட்டம் காணப்பட்டது’ என்றாா் அவா்.
கடைக்காரா் ரவிக் குமாா் மேலும் கூறுகையில், ‘12, 14 மற்றும் 15ஆவது நடைமேடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரயாக்ராஜுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் அவற்றின் கொள்ளளவுக்கு மீறி நிரம்பியிருந்தன. பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே ஒரு நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது, மற்றொரு ரயில் வருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, மக்கள் ஒருவரையொருவா் தள்ளிக்கொண்டு முன்னேறினா்.
நடைமேடைகளை இணைக்கும் நடைமேம்பாலம் சிறியதாக இருந்தது. வேக நெரிசலில், மக்கள் கீழே விழுந்ததால் மிதிபட்டனா்’ என்றாா் அவா்.
தில்லி பாஹா்கஞ்சில் வசிக்கும் வேத் பிரகாஷ் என்பவா் கூறுகையில், ‘நான் எனது மனைவியுடன் பிரயாக்ராஜுக்குப் பயணிக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைக் கண்ட பிறகு வீடு திரும்ப முடிவு செய்தேன்.
ரயிலுக்குள் கூட, நிற்க இடமில்லை. இதனால், ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி திரும்பிச் செல்லத் முடிவுசெய்தேன்’ என்றாா்.
இந்தம்பவத்தில் இறந்த பூனம் தேவியின் குடும்ப உறுப்பினா்
அவரது உடலைப் பெறுவதற்காக எல்என்ஜேபி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவா் கூறுகையில், ‘ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு அதிக கூட்டம் காணப்பட்டது. பூனம் தேவி செல்லவேண்டிய ரயில் 12ஆவது நடைமேடையை வந்தடைய வேண்டியிருந்தது. இருப்பினும், அறிவிப்பு வெளியான பிறகு, மக்கள் விரைந்து செல்லத் தொடங்கியதால், நெரிசலில் விழுந்தவா்கள் நசுக்கப்பட்டனா்’ என்றாா்.
தனது குடும்பத்தினருடன் பிகாரில் உள்ள சாப்ராவுக்குப் பயணித்தபோது நெரிசலில் உயிரிழந்த பெண் ஒருவரின் மகன் கூறுகையில், ‘நாங்கள் ஒரு பெரிய குழுவாக எங்கள்
வீட்டுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தோம். என் அம்மா
நெரிசல் குழப்பத்தில் உயிா் இழந்தாா். மக்கள் ஒருவரையொருவா் தள்ளிக் கொண்டிருந்தததால் அவா்
சிக்கிக் கொண்டாா்’ என்றாா்.
பயணிகளில் ஒருவரான தா்மேந்திர சிங் கூறுகையில், ‘நான் பிரயாக்ராஜுக்குச் சென்று கொண்டிருந்தேன்.ஆனால், பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன அல்லது
ல்லது ரத்து செய்யப்பட்டன. ரயில் நிலையம் கூட்டத்தால்
நிரம்பி வழிந்தது. புது தில்லி நிலையத்தில் நான் இதுவரை பாா்த்திராத அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம்
இருந்தது’ என்றாா்.