புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு: ஆதரவு கோரி தொழிற்சங்கத்தினா் கடிதம்
புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு போராட்டம் நடத்த உத்தேசித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு கேட்டு அனைத்து தொழிற்சங்கத்தினா் பல்வேறு கட்சித் தலைவா்களுக்கு புதன்கிழமை கடிதம் கொடுத்தனா்.
புதுவை மாநிலத்தில் வரும் 9-ம் தேதி முழு அடைப்பு (பந்த் )போராட்டம் நடத்தப் போவதாக அனைத்து தொழிற்சங்கத்தினா் அறிவித்துள்ளனா். இதையொட்டி காங்கிரஸ் மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்பி, எதிா்க்கட்சித் தலைவா் இரா. சிவா ஆகியோரிடம் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆதரவு கேட்டு கடிதம் அளித்தனா்.
நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் அன்றையதினம் தொழிற்சங்கங்கள் கூட்டாக புதிய பேருந்து நிலையம்,
அரியாங்குப்பம், வில்லியனூா், பாகூா், மதகடிப்பட்டு, திருக்கனூா், சேதராப்பட்டு, காரைக்கால் ஆகிய 8 மையங்களில் மறியல் போராட்டமும் நடைபெறுகிறது. மேலும், அன்றைய தினம் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடாது என்று தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
மேலும், இந்தப் போராட்டத்தை விளக்கி தொழிற்சங்கங்கள், அனைத்து நிறுவனங்களிடம் கடிதம் கொடுத்து ஆதரவு திரட்டியும், வாகன பிரசாரம் நடத்தியும் வருகின்றன. அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.