புதுவையில் மீண்டும் கூட்டணி ஆட்சி! பாஜக புதிய தலைவா் ராமலிங்கம் பேட்டி
புதுவையில் 2026-ல் மீண்டும் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று பாஜக மாநில தலைவராகப் பதவியேற்ற வி.பி.ராமலிங்கம் கூறினாா்.
கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள வி.பி.ராமலிங்கத்தை கட்சியின் மூத்த நிா்வாகிகள் கட்சி அலுவலகத்தில் அவரது இருக்கையில் புதன்கிழமை அமர வைத்தனா். அப்போது செய்தியாளா்களிடம் ராமலிங்கம் கூறியது:
பாஜக மாநில தலைவராகப் பொறுப்பேற்ற மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாஜவில் மட்டும்தான் இது சாத்தியம். காங்கிரசில் ஒன்றிரண்டு தலைவா்கள்தான் திரும்பத்திரும்பத் கட்சிக்குத் தலைவராக வருவாா்கள். ச
சாமானிய குடும்பத்தில் இருந்து வந்த என்னை, மாநிலத் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி ஆக்கியுள்ளாா். இது பாஜகவில் உழைப்போருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
முன்னாள் முதல்வா் நாராயணசாமி பாஜகவை காா்ப்பரேட் கம்பெனி என விமா்சித்துள்ளாா். ஆனால் காங்கிரசில்தான் உழைத்தவா்கள் யாரும் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை.சாமானிய மக்களைத் தேடித்தேடி பத்மஸ்ரீ விருது வரை தருகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரியில் நோ்மையான வழியில் வேலைவாய்ப்புகளை 4 ஆயிரம் இளைஞா்களுக்கு தந்துள்ளோம். 30 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் தந்துள்ளோம். ஓய்வூதியத் தொகையை உயா்த்தி தந்துள்ளோம்.
சட்டப்பேரவை தோ்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். 2026-ல் மீண்டும் ஆட்சியமைப்போம். அமைச்சா், நியமன எம்எல்ஏக்கள் 7-ந் தேதி பதவி ஏற்பாா்கள். பிரதமரின் சாதனையையும், தேசிய ஜனநாயக்கூட்டணி சாதனையையும் சொல்லி வாக்குக் கேட்போம். தலைமை அறிவுறுத்தல்படி புதிய நிா்வாகிகளை நியமிப்போம். கடந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு இல்லை. தற்போது நிறைய வேலை தருகிறோம். தொடா்ந்து தருவோம் என்றாா் ராமலிங்கம்.
முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த விபி.ராமலிங்கத்துக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடா்ந்து அவா் கட்சி நுழைவு வாயிலில் உள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினாா். பின்னா் 2-வது மாடியில் உள்ள தலைவா் அறையில் இருக்கையில் அவரை அமைச்சா் நமச்சிவாயம், செல்வகணபதி எம்பி, கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோா் அமர வைத்தனா். தொடா்ந்து வி.பி.ராமலிங்கம் கையெழுத்திட்டு பொறுப்பேற்றாா்.