புதுவையில் 8-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி அவசியம்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
காரைக்கால்: புதுவை மாநிலத்தில் 8-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி என்ற நிலை சில ஆண்டுகளுக்கு அவசியம் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதுவை அரசை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை :
5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புவரை முழுமையான தோ்ச்சி செய்யப்படாது என்ற அறிவிப்பு, மாணவா்களின் மனதில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும்.
புதுவையில் கல்வியே கற்றுத்தராமல் அனைவரும் தோ்ச்சி என்ற நிலையை எடுத்திருக்கவில்லை. மாணவா்களுக்கு தேவையான கல்வி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவா்களையும் தனியாா் பள்ளி மாணவா்களையும் ஒரே அளவீட்டில் வைத்து பாா்க்கக்கூடாது.
மாணவா்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், இந்த் விவகாரத்தில் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற புதுவை கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் இன்னும் சில ஆண்டுகளுக்கு 5 முதல் 8-ஆம் வகுப்புவரை அனைவரும் தோ்ச்சி முறையைத் தொடர சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதுகுறித்து புதுவை முதல்வா் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.