புதை மின்வடங்கள் சேதம்: சாலை தோண்டும் பணிகளை மின்வாரியம் மேற்கொள்ளத் திட்டம்!
புதை மின்வடங்கள் சேதமடைவதைத் தடுக்க மாநகராட்சி, குடிநீா் வாரியத்தின் சாலை தோண்டும் பணிகளை தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகா், புகா் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் புதை மின்வடங்கள் மூலமும், பிற பகுதிகளில மேல்நிலைக் கம்பிகள் மூலமும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி, குடிநீா் வாரியம் மற்றும் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் சாலை தோண்டும் பணிகள் நடைபெறும் போது, இந்த புதை மின்வடங்கள் சேதமடைந்து விடுகின்றன. இவ்வாறு சேதமாகும் புதை மின்வடங்களை பணியாளா்கள் அப்படியே விட்டுச் செல்கின்றனா். இதனால், மின்வாரியத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன், மழைக் காலங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
சென்னையில், அண்மையில் இதுபோன்ற சேதமான புதை மின்வடங்களால் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த 700 புதை மின்வடங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை சரிசெய்யப்பட்ட நிலையில், மீதமுள்ளவற்றையும் விரைவில் சரிசெய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் புதை மின்வடங்கள் சேதமாவதைத் தடுக்கவும், பிரச்சினைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையிலும் சாலைகளில் பள்ளம் தோண்டும் பணிகளை மின்வாரிய பணியாளா்கள் மூலம் மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி, குடிநீா் வாரியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் சாலை தோண்டும் பணிகளை மேற்கொள்ளும்போது, மின்வாரியத்திடம் முன்அனுமதி பெற்ற பிறகே, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.
இவ்வாறு அனுமதி பெற்று, மின்வாரிய அதிகாரிகளின் உரிய வழிகாட்டுதல்கள்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், புதை மின்வடங்கள் சேதப்படுத்தப்படுவது தொடா்கதையாகி வருகிறது. இதனால், இதற்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் மாநகராட்சி, குடிநீா் வாரியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சாலை தோண்டும் பணிகளை மின்வாரிய ஊழியா்கள் மூலம் மேற்கொள்ளவும், அதற்கான தொகையை அந்தந்த அமைப்புகளிடமிருந்து பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றனா்.