பெங்களூரு: உபர் புக் செய்து காத்திருந்த ஐடி ஊழியர்... டிரைவராக வந்த `டீம் ஹெட்’ சொன்ன காரணம்
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் பெங்களூரு. பொருளாதாரத் தேவை, லட்சியத்தை நோக்கியப் பயணம், அல்லது பொழுதுபோக்கு எனப் பல்வேறு காரணங்களுக்காக பெங்களூரில் பல இளைஞர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்துவருகின்றனர். அதுபோன்ற சம்பவம் குறித்து பதிவர் ஒருவர் சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது.

ஐடி ஊழியர் ஒருவர் பயணம் செய்ய ஊபர் வாகனம் ஒன்றை புக் செய்து காத்திருக்கிறார். அப்போது ஒரு வாகனம் வந்து நிற்கிறது. அதில் ஏறி ஓடிபி சொல்லும்போது யதார்த்தமாக பார்த்தால், தன்னுடன் பணி செய்யும் சக ஊழியர். அதுவும் தன்னுடைய டீம் மேனேஜர். ``என்னா பங்கு இங்க" என ஆச்சர்யம் கலந்து கேட்டிருக்கிறார் உபர் புக் செய்தவர். அதற்கு அவர், `எனக்கு பணத் தேவை இல்லை. ஆனால், அலுவலகம் விட்டால் அறை - அறை விட்டால் அலுவலகம் என சலிப்பாக இருக்கிறது. அதனால் டாக்ஸி ஓட்டத் தொடங்கினேன். புதிய புதிய மனிதர்கள், அனுபவங்கள் என சலிப்பிலிருந்து தப்பிக்க இந்த முடிவெடுத்தேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.