ஒரு ஜோலா பையின் விலை 4,100 ரூபாய்! - எந்த நாட்டில் விற்கப்படுகிறது தெரியுமா?
நம் ஊரில் உள்ள அனைத்து மளிகைக் கடைகளிலும் நாம் ஜோலா பைகளைப் பார்த்திருப்போம். சிலர் வீடுகளிலும், இவற்றைப் பயன்படுத்துவதுண்டு.
பீடிகம்பனி, சோப்பு கம்பனி, மசாலா கம்பனி போன்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள்தான் ஜோலா பைகளின் ஸ்பான்சர்களாக இருப்பர்.
பெரு நகரங்களில், சூப்பர் மார்கெட்டுகளில் ஜோலா பைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. சிலருக்கு இந்த பைகள் நாஸ்டாலஜியாவான பழைய நினைவுகளைத் தூண்டும் பொருளாக இருக்கிறது.

இன்றளவும் கிராமங்களில், சிறுநகரங்களில் வியாபாரம் செய்பவர்கள் ஜோலா பைகளைப் பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்த பைகள் சொந்த மண்ணை நினைவுபடுத்தும் உயர்ந்த உணர்வைத் தருகிறது.
ஜோலா பைகள் பொதுவாக பருத்தி அல்லது கம்பளியால் நெய்யப்பட்டிருக்கும். அதிக எடையை தாங்கிக்கொள்வதற்கு ஏற்றதுபோல வலுவானதாக இருக்கும். காய்கறி முதல் இரும்பு பொருட்கள் (டூல்ஸ்) வரை நம் நாட்டின் எளிய மக்கள் தங்கள் வேலைகளுக்கு இதனைப் பயன்படுத்துகின்றனர். இது சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்காது.
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இவைப் பயன்பாட்டில் இருக்கின்றன. நம் அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் இந்த பொருளை ஆன்லைனில் பிராண்டிங் செய்து அமெரிக்க டாலர்களில் விற்றுவருகிறது ஒரு நிறுவனம்.
ஆடம்பர பொருட்களை சில்லரை வியாபாரம் செய்யும் அமெரிக்க நிறுவனம், நோர்ட்ஸ்ட்ரோம். இதில் நம் உணர்வுகளைத் தூண்டும் விதமாக, “இந்திய நினைவுப் பை” என்ற பெயரில் இது விற்கப்பட்டு வருகிறது.
பியூப்கோ (Puebco) என்ற ஜப்பானிய நிறுவனம் தயாரிக்கும் இந்த ஜோல்னா பையை அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் (விலை+ஷிப்பிங்) 48 அமெரிக்க டாலர்கள், அதாவது 4,100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
அவர்கள் தயாரித்துள்ள பைகளில் இந்தி எழுத்துக்களால் புகழ்பெற்ற இந்திய உள்ளூர் தயாரிப்புகளின் பெயர்களை அச்சிட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இந்திய கலாசாரத்தைத் தெரிவிக்கும் பொருளாக மாறியுள்ள ஜோல்னா பைக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்வது உள்ளூர் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. "இதை யார் இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறார்" எனத் திகைக்கின்றனர்.
நாம் பொருட்கள் வாங்கும்போது இலவசமாகவும், அதிகபட்சம் 100 ரூபாய்க்குள்ளும் வாங்கும் பையை 48 டாலருக்கு விற்பது பற்றி இன்ஸ்டாவில் பதிவிடப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.