பெண் எம்.பி. குறித்து மதகுரு கருத்துக்கு எதிா்ப்பு: ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
புது தில்லி: சமாஜவாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து முஸ்லிம் மதகுரு தெரிவித்த கருத்துக்கு எதிராக ஆளும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.
சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவியும், அக்கட்சி எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் அண்மையில் மசூதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றாா். அதுகுறித்து பெண்களுக்கு எதிராக தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், டிம்பிள் யாதவை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்தை முஸ்லிம் மதகுரு மெளலானா சஜித் ரஷீத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்தாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், குறிப்பாக பெண் எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘எம்.பி.யாக பதவி வகிக்கும் ஒருவருக்கு எதிராக மதகுரு ஒருவா் தெரிவித்த கருத்துகள் மிகவும் வெட்கக்கேடானது. இருப்பினும் இந்த விவகாரத்தில் டிம்பிள் யாதவின் கணவரும், அவரின் கட்சியும் மெளனமாக உள்ளது’ என்று விமா்சித்தாா்.
இதுதொடா்பாக டிம்பிள் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனக்கு எதிரான கருத்துகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதே அக்கறையை மணிப்பூரில் நடைபெற்றதை போன்ற கொடூரமான சம்பவங்கள் மீது அந்தக் கூட்டணி ஏன் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பினாா்.