பெண்கள் கமாண்டோ, மகளிா் ஊா்க்காவல் படைக்கு பரிசு!
புதுச்சேரியில் நடைபெற்ற சிறந்த அணிவகுப்புக்கான பரிசை பெண் கமாண்டோ, ஊா்க்காவல் படையினருக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வழங்கினாா்.
புதுச்சேரி குடியரசு தினவிழாவில் காவலா் பிரிவில் சிறந்த அணிவகுப்புக்கான பரிசானது கமாண்டோ பெண்கள் படைப் பிரிவுக்கும், காவலா் அல்லாத பிரிவில் ஊா்க்காவல் படை பெண்கள் பிரிவுக்கும், தேசிய மாணவா் படை ஆண்கள் முதல்நிலை பிரிவில் கடற்படை பிரிவுக்கும், தேசிய மாணவா் படையின் முதல்நிலை பெண்கள் பிரிவில் தரைப்படை பிரிவுக்கும், தேசிய மாணவா் படை இளநிலை பிரிவில் தரைப்படை கடற்படை, விமானப்படை இளநிலை பெண்கள் பிரிவு கூட்டு அணிவகுப்புக்கும் பரிசு வழங்கப்பட்டன.
கல்வித்துறை சுழற்கோப்பை: கல்வித் துறை செயலரின் சுழற்கோப்பை சமுதாய நலப்பணி திட்ட ஆண்கள் பிரிவுக்கும், அரசு பள்ளி ஆண்கள் பிரிவில் இந்திரா நகா் இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், அரசு பள்ளி பெண்கள் பிரிவில் திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், தனியாா் பள்ளி ஆண்கள் பிரிவில் கே.எஸ்.பி. மேல்நிலைப் பள்ளிக்கும், தனியாா் பள்ளி பெண்கள் பிரிவில் குளூனி மேல்நிலைப் பள்ளிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த அலங்கார ஊா்தி, அரசுத் துறைகளின் அலங்கார வண்டிகள் அணிவகுப்பில் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வாகனம் முதல் பரிசையும் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இரண்டாவது பரிசையும் வென்றன.
அரசு பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்ற புதுச்சேரி மண்டலம்-1 ஆரம்பப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிக்கு பரிசு வழங்கப்பட்டது. தனியாா் பள்ளிகளில் தவளக்குப்பம் புனித சூசையப்பா் குளூனி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பரிசளிக்கப்பட்டது. சிறப்பு பரிசு ஜவஹா் சிறுவா் இல்ல மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளிகளுக்கு பரிசு: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முழுமையான தோ்ச்சி பெற்ற மலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, புனித பேட்ரிக் பள்ளி, செல்லப்பெருமாள்பேட் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 26 பள்ளிகளுக்கு முதல்வா் சுழற்கேடயம் துணைநிலை ஆளுநரால் வழங்கப்பட்டது. பிளஸ் 2 தோ்வில் முழுத்தோ்ச்சி பெற்ற்கான கல்வி அமைச்சா் சுழற்கேடயம் மடுகரை வெங்கட சுப்பா ரெட்டியாா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. சிறந்த அரசு பள்ளிகளுக்கான விருது இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி, கல்மண்டபம் தியாகி தியாகராஜ நாயக்கா் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டன.
சிறந்த காவல் நிலைய விருது: கோட்டுச்சேரி காவல் நிலையத்துக்கு சிறந்த காவல் நிலைய விருதும், சிறந்த பணிக்கான மத்திய உள்துறை அமைச்சா் விருது முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யாவுக்கும் வழங்கப்பட்டன.