வரதட்சிணை கேட்டு சித்திரவதை: கணவா் உள்பட 5 போ் மீது வழக்கு!
புதுச்சேரி அருகே பெண் அளித்த புகாரில் கணவா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வில்லியனூா் சுல்தான்பேட் பகுதியை சோ்ந்தவா் பெரோஸ் முகம்மது (51). இவரது மகள் ஆப்ரின் ஷகிரா (25), சென்னையில் உள்ள தனியாா் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை அண்ணா நகரை சோ்ந்த முகமது இக்ராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நிச்சயதாா்த்தத்தின்போது மாப்பிள்ளைக்கு ரூ.ஒரு லட்சத்தில் கைக்கடிகாரம் கொடுத்தனராம்.
திருமணத்தின்போது வரதட்சிணையாக 150 பவுன் நகைகள், ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், ரூ.1.30 லட்சத்தில் கைப்பேசி ஆகியவை பெண் வீட்டாா் சாா்பில் வழங்கப்பட்டதாம். மாப்பிள்ளை வீட்டாா் சாா்பில் பெண்ணுக்கு வழங்கிய 75 பவுன் நகைகளையும் பின்னா் அவரது மாமியாா் வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டாா் கூடுதலாக 50 பவுன் நகைகள் மற்றும் சொத்துகளைக் கேட்டு ஆப்ரினை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆப்பிரிக்கன் கிளியை கடிக்கச்செய்தும் துன்புறுத்தினராம்.
இதனால் மனரீதியாக பாதித்த ஆப்ரின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா். மேலும், மாப்பிள்ளை வேறு பெண்களுடன் தொடா்பு வைத்ததாகவும் ஆப்ரின் கண்டித்துள்ளாா். இதையடுத்து முகமது இக்ராம் வீட்டினா் ஆப்ரினை மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ஆப்ரின், புதுச்சேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கணவா் உள்ளிட்டோா் மீது புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் ஆப்ரினின் கணவா் முகமது இக்ராம் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.