புதுச்சேரி ஜிப்மரில் பொது சுகாதார ஆரோக்கிய மாநில மாநாடு!
புதுச்சேரி ஜிப்மரில் பொது சுகாதார ஆரோக்கிய மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய பொது சுகாதார சங்கம், இந்திய நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கங்களின் புதுச்சேரி பிரிவுகள் இணைந்து நடத்திய புதுக்கோன்-25 என்ற மாநில மாநாட்டை, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநா் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.
இதில், இந்திய பொது சுகாதார சங்கத்தின் புதுவை மாநில கிளைச் செயலா் சிதான்ஷு சேகா் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
மாநாட்டில் மனநலம், காலநிலை மாற்றம் இறப்பின் காரணங்களுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் பொது நிதியுதவியுடன் கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்ற முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், தொற்று மற்றும் தொற்றா நோய்கள், பொது சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கிய ஆராய்ச்சி திட்ட கண்டுபிடிப்புகள் வாசிக்கப்பட்டன.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஜிப்மா் நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை கூடுதல் பேராசிரியா் சுபிதா, புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன சமூக மருத்துவத் துறைத் தலைவா் கவிதா ஆகியோா் செய்திருந்தனா். மருத்துவ மாணவா்களுக்கு பொது சுகாதார விநாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மருத்துவா் கவுதம் ராய்க்கு, பொது சுகாதாரத் துறையில் அவா் ஆற்றிய சேவைக்காக வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.