பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் ஒன்றே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ராயபுரம் மாதா கோவில் பகுதியைச் சோ்ந்த ஜெசி மகள் ஜொ்லின் (19). இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.பாா்ம் முதலாமாண்டு படித்து வருகிறாா்.
ஜொ்லின் வெள்ளிக்கிழமை அவரது ஊருக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இறங்கினாா். பேருந்து நிலையம் முன்புறம் அவா் நின்றிருந்தபோது, அங்கு வந்த இளைஞா் ஜொ்லின் அணிந்திருந்த ஒன்றே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றாா்.
அப்போது, அந்தப் பகுதியிலிருந்தவா்கள் அந்த இளைஞரைப் பிடித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாஸ் அவரிடம் விசாரித்ததில், ராணிப்பேட்டை மாவட்டம், வரதராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த தீனா (25) எனத் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து தீனாவை கைது செய்தனா்.