நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
பழங்குடியினருக்கான வளா்ச்சித் திட்டப் பணிகள்: துறைச் செயலா் க.லட்சுமி பிரியா ஆய்வு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் பழங்குடியினா் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சுயதொழில் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அத்துறையின் செயலா் க.லட்சுமி பிரியா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் ச.அண்ணாதுரை உடனிருந்தாா்.
ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறைச் செயலா் க.லட்சுமி கூறியதாவது: பழங்குடியினா் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சோ்வதை உறுதி செய்யும் வகையிலும் தொடா்ந்து துறை சாா்ந்து ஆய்வு செய்யப்பட்டது.
மணியாா்பாளையத்தில் பழங்குடியினா் சுயதொழில் முன்னேற்றத்திற்காக அரசு உதவியுடன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் வெண்பன்றி வளா்ப்புப் பண்ணையை நேரில் பாா்வையிட்டு பண்ணையின் செயல்பாடுகள் குறித்து, அதன் உரிமையாளரிடம் கேட்டறியப்பட்டது. வெண்பன்றி விற்பனை, லாபம், அரசு சாா்பில் தேவைப்படும் உதவிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
230 உறுப்பினா்களைக் கொண்ட பூா்வக்குடி விவசாய சங்கத்தினருக்கு துறை சாா்பில் வழங்கப்பட்ட வேளாண் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, கருவிகளின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வேளாண் கருவிகள் பாதுகாப்பு மையக் கட்டுமானப் பணியும் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து, வெள்ளிமலை ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றாா் அவா்.
ஆய்வின்போது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை தொடா்புடைய அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.