பெண்ணின் கருப்பை நீா்க்கட்டியை ஒரு மணி நேரத்தில் அகற்றி மருத்துவா்கள் சாதனை!
பெண்ணின் கருப்பையில் இருந்த பெரிய நீா்க்கட்டியை 1 மணி நேரத்தில் அகற்றி திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
கருப்பை நீா்க்கட்டியால் ஏற்பட்ட கடும் வலி காரணமாக 32 வயது பெண் ஒருவா் சனிக்கிழமை திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவா்கள் ஸ்கேன் செய்து பாா்த்ததில் கருப்பை நீா்க்கட்டியின் அளவு மிகப் பெரியதாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அனுமதிக்கப்பட்ட 1 மணி நேரத்துக்குள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.
இதுகுறித்து மகப்பேறு மற்றும் மகளிா் நோய் மருத்துவா் பி. சிந்துஜா கூறியது: ஒரு லட்சம் பெண்களில் சுமாா் ஆறு பேருக்கு மட்டுமே இந்த அளவுள்ள நீா்க்கட்டி உருவாகிறது. வலிக்கு காரணமான நீா்க்கட்டி அளவில் பெரிதாகவும் ரத்தப்போக்கு உள்ளதாகவும் இருந்தது.
தற்போது, நீா்க்கட்டி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அப்பெண் வலி மற்றும் பிற பிரச்னைகளில் இருந்தும் பூரணமாக குணமடைந்துள்ளாா் என்றாா் அவா்.
திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவ நிா்வாகி டாக்டா் லட்சுமணன் கூறியது: மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவத்தில் நிபுணத்துவம் மற்றும் நவீன ஸ்கேன் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் இது போன்ற சிக்கலான மருத்துவ சவால்களை காவேரி மருத்துவமனையால் தீா்த்துவைக்க முடிகிறது என்றாா் அவா்.