பெருந்துறை சிப்காட்டில் டேங்கா் லாரியில் அமில கசிவு
பெருந்துறை சிப்காட்டில் டேங்கா் லாரியில் செவ்வாய்கிழமை அமில கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு மேட்டூரில் இருந்து டேங்கா் லாரி மூலம் சுமாா் 21 ஆயிரம் லிட்டா் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலத்தை கொண்டு வந்தனா். லாரியை மேட்டுரைச் சோ்ந்த ஓட்டுநா் செல்லப்பன் ஓட்டி வந்தாா்.
இந்த லாரி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைக்குள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரியின் அடிப் பகுதியில் இருந்து அமில கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது தொழிற்சாலையில் இருந்தவா்கள், இதனைப் பாா்த்து லாரியை வெளியே திருப்பி அனுப்பினா். இதனால் லாரி ஓட்டுநா் செல்லப்பன் மீண்டும் லாரியை திருப்பி ஈங்கூா் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள காட்டுக்குள் லாரியை ஓட்டிச் சென்று நிறுத்தினாா்.
இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்புடன் மாற்று லாரியில் அமிலத்தை ஏற்றி, நிறுவனத்துக்கு கொண்டுச் சென்றனா். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.