பேட்டையில் மின் கம்பத்தில் மோதிய அரசுப் பேருந்து
திருநெல்வேலியை அடுத்த பேட்டை செக்கடி அருகே அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுத்தமல்லி பெரியாா் நகருக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை காலையில் புறப்பட்டுச் சென்றது. பேருந்தை திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (55 ) ஓட்டி சென்றாா். பழைய பேட்டை காந்திநகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் (52) நடத்துநராக பணியில் இருந்தாா்.
பேட்டை செக்கடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேருந்தின் ஸ்டியரிங்கில் திடீரென பழுது ஏற்பட்டதாம். இதன் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த இரும்பு மின் கம்பத்தில் மோதியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அலறினா். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்த பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினா்.