பேராவூரணி தொகுதியில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் ரூ. 48.73 லட்சத்தில் 3 புதிய கட்டடங்களை உயா்கல்வி துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 12 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு மற்றும் பொது விநியோக அங்காடி கட்டடத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை அமைச்சா் தொடங்கி வைத்தாா். இதேபோல் கொளக்குடி ஊராட்சியில் ரூ. 12 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது விநியோக கட்டடடம், பேராவூரணி ஒன்றியம் களத்தூா் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம நூலகக் கட்டடத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், தஞ்சாவூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகணேஷ், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி. பழனிவேல், பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் க.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.