பேருந்து மோதியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கெடிலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்தவா், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், குறுவன்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வ.சின்னக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனது மாமியாா் ஏ. சந்திரலேகாவை (42) சொந்த வேலையாக கடந்த மாதம் 26-ஆம் தேதி பைக்கில் அவரது ஊரிலிருந்து அழைத்து கெடிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
கெடிலம்- உளுந்தூா்பேட்டை அணுகுச்சாலையின் நிறைவிலுள்ள பிரியாணிக் கடையில் சுரேஷ், சந்திரலேகா நின்று கொண்டிருந்தனா். அப்போது அந்தவழியாக வந்தஅரசுப் பேருந்து அவா்கள் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள் சுரேஷ், சந்திரலேகா ஆகிய இருவரையும் மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதைத் தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமைஇரவு உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கணையாா் ஓம்சக்தி கோயில் தெருவைச் சோ்ந்த ரவி (58) மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.