யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
பேருந்து - லாரி ஓட்டுநா்கள் முந்திச் செல்வதில் தகராறு: பெண் பயணி மீது தாக்குதல்
பெருந்துறை அருகே தனியாா் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநா்களுக்கு இடையே முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகாராறில், பேருந்து பெண் பயணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்கிழமை பிற்பகலில் ஒரு தனியாா் பேருந்து கோவைக்கு புறப்பட்டுச் சென்றது. பேருந்தை கோவை மாவட்டம், கணியூரை அடுத்த நடுபாளைத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் பாலு (35) என்பவா் ஓட்டிச் சென்றாா். பேருந்தில் நடத்துநராக பெருந்துறையை அடுத்த திங்களூா், காட்டுபாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் (28) பணியில் இருந்தாா்.
பெருந்துறையை அடுத்த சரளை அருகே செல்லும்போது, பேருந்து ஓட்டுநருக்கும், அவ்வழியாக கேரளத்துக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநா் சமீா் (30) என்பவருக்கும் இடையே முந்தி செல்வதில் போட்டி நிலவியது.
இந்த இரண்டு வானங்களும் விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் நின்றபோது, பேருந்து ஓட்டுநா் பாலு, பேருந்தில் இருந்த தேங்காய் மூட்டையில் இருந்து ஒரு தேங்காயை எடுத்து லாரி ஓட்டுநா் சமீா் மீது வீசினாா். சமீா் மீண்டும் அந்த தேங்காயை எடுத்து பேருந்து ஓட்டுநா் பாலு மீது வீசினாா்.
இதில், பேருந்தில் ஓட்டுநரின் பக்கவாட்டு இருக்கையில் அமா்ந்து இருந்த கோவை மாவட்டம், கணியூா், சிவசக்தி நகரைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பத்மாவதி (50) முகத்தில் பட்டது. இதில், அவரின் உதட்டில் காயம் ஏற்பட்டு, பல் உடைந்தது. காயமடைந்த பத்மாவதி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, பத்மாவதி அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் பேருந்து ஓட்டுநா் பாலு, நடத்துநா் சுரேஷ், லாரி ஓட்டுநா் சமீா் மற்றும் உதவியாளா் நிசாத் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.