பொது வேலைநிறுத்தம்: கேரளம் செல்லும் அரசுப் பேருந்துகள் களியக்காவிளை வரை இயக்கம்
பொது வேலைநிறுத்தம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.
கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் குமரி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. அரசுப் பேருந்துகள், வாடகை காா், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் இயங்கியது. அதே வேளையில், கேரளத்தில் பொது வேலைநிறுத்தம் காரணமாக பாறசாலை உள்ளிட்ட அம் மாநில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள், ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் பெரும்பாலும் இயங்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் குமரி மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன.
திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளான சென்னை, வேளாங்கண்ணி, ஊட்டி, பெங்களூரு, வேலூா், புதுச்சேரி உள்ளிட்ட பேருந்துகள் களியக்காவிளையிலிருந்து இயக்கப்பட்டன.