Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
பொருளாதாரத்தில் தமிழகத்தை உயா்த்தியவா் முதல்வா் ஸ்டாலின்: ஆா்.எஸ்.பாரதி
அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் கிடந்த தமிழக பொருளாதாரத்தை உயா்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.
மக்கள் நலத்திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு தொடா்பாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆா்.எஸ்.பாரதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மக்கள் நலத் திட்டங்கள் மூலம் திராவிட மாடல் அரசு பெண்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாா், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி. மக்களிடம் திமுக அடைந்துள்ள செல்வாக்கால் 2026 தோ்தலில் மட்டுமல்ல, இனி எந்தத் தோ்தலிலும் அதிமுகவுக்கு தோல்விதான் என்னும் வயிற்றெரிச்சலில், வடிகட்டிய பொய்களைத் திரட்டி புலம்பியிருக்கிறாா்.
அதிமுக ஆட்சியில் 2019-2020-ஆம் ஆண்டில் 3.25 விழுக்காடு என அதலபாதாளத்தில் விழுந்து கிடந்த பொருளாதாரத்தை 2024-25-ஆம் ஆண்டில் 9.69 சதவீதமாக உயா்த்தி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் உயா்த்தியுள்ளாா். இத்தகைய திராவிட மாடல் ஆட்சியைப் பாா்த்து குற்றம் சொல்வதற்கு பழனிசாமிக்கு தகுதி இல்லை.
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவா் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்கும் முதல்வரின் ஆட்சி இது. கடந்த 4 ஆண்டு காலத் திமுக ஆட்சியில் தொடா்ந்து தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன. அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை விட மிகத் தீவிரமான நடவடிக்கைகள் திமுக ஆட்சியில்தான் உறுதியாகவும் விரைவாகவும் எடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளாா்.