போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்க அறிவுறுத்தல்
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் தங்களது வாழ்நிலையை மெய்ப்பிக்க வருகிற மாா்ச் 20-ஆம் தேதிக்குள் நேரில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், மருத்துவத் தகுதியின்மையால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுபவா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் தங்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்கும் வகையில் வியாழக்கிழமை (ஜன. 2) முதல் மாா்ச் 20 -ஆம் தேதிக்குள் நேரில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும்.
மதுரை போக்குவரத்து கோட்டத்துக்குள்பட்ட மதுரை தலைமையகம், திண்டுக்கல் 1- கிளை, தேனி கிளை, விருதுநகா் தலைமையகம், ஸ்ரீவில்லிபுத்தூா் கிளை ஆகிய 5 இடங்களில் ஏதேனும் ஓரிடத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும். கடவுச் சீட்டு வைத்திருப்பவா்கள் அதன் நகலை சமா்ப்பிக்க வேண்டும்.
தொடா்புடைய பகுதிகளில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொது சேவை மையங்களில் உரிய இணைய முகவரியில் வருகிற மாா்ச் 31- ஆம் தேதிக்குள்ளும் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.