போச்சம்பள்ளியில் ரூ. 4.83 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4.83 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 3075 கிலோ கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், கிலோ ஒன்று அதிகபட்சமாக ரூ. 170.09-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 77.89-க்கும், சராசரியாக ரூ.167.98-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 4.83 லட்சத்துக்கு விற்பனையானது.
இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அருள்வேந்தன் கூறுகையில், ‘போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்றனா். இ-நாம் முறையில் நடைபெற்ற ஏலத்தில், லாபகரமான விலைக்கு கொப்பரை ஏலம் போனது. விற்பனை செய்யப்பட்ட தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்பட்டது.
கொப்பரை, பருத்தி மற்றுமின்றி நெல் ஏலமும் மின்னணு வா்த்தக முறையில் நடைபெற உள்ளதால், நெல் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றாா்.