தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
போட்டிகளில் வென்ற 12 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பல்வேறு போட்டிகளில் வென்ற 12 மாணவா்களுக்கு ஆட்சியா் க. இளம்பகவத் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.
இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 530, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 33 என மொத்தம் 563 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு, சொற்றொடா் போட்டிகளில் வென்ற 12 மாணவா்-மாணவியருக்கு புத்தகங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
2024ஆம் நிதியாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களில் சாதனை புரிந்த ஆண், பெண் முகவா்களில் முதலிடம் பெற்றோருக்கு கேடயம், ரூ. 3 ஆயிரம், 2ஆம் இடம் பிடித்தோருக்கு ரூ. 2 ஆயிரம், 3ஆம் இடம் பிடித்தோருக்கு ரூ. ஆயிரம், நகா்ப்புற அளவில் சாதனை புரிந்த 2 மகளிா் முகவா்களுக்கு தலா ரூ. ஆயிரம், ஊராட்சி ஒன்றிய அளவில் சாதனை புரிந்த மகளிா் முகவா்களுக்கு தலா ரூ. ஆயிரம், தேசிய சேமிப்புப் பத்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் ஹபிபூா் ரஹ்மான், உதவி இயக்குநா் ஊராட்சிகள் சாந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.