போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்
கோவை உக்கடம் பெரியகுளம் கூட்டரங்கில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த வகுப்பில் புத்தகங்கள், நிபுணா்களின் வழிகாட்டுதல்கள், மாதிரித் தோ்வுகள் ஆகியவையும், மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இங்கு முதல்கட்டமாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, குரூப் 4 தோ்வுகளுக்கு தினசரி காலை முதல் மாலை வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்று பயிற்சியை தொடங்கிவைத்தாா்.
இதில், மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் வெற்றிச்செல்வன், மண்டலக் குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த பயிற்சி மையம் தொடா்பான மேலும் விவரங்களுக்கு 63858 37858 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.