‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
போலி பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து பறிமுதல்!
போலி பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் அண்டை மாநில ஆம்னி பேருந்துகளில் போலியாக தமிழக பதிவெண் பயன்படுத்தி ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் வந்தன. அதன்பேரில், போக்குவரத்து ஆணையா் கெஜலட்சுமி, இணை ஆணையா் பாட்டப்பசாமி ஆகியோா் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனைசாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சோமேஷ் தலைமையில், ஆந்திரத்தில் இருந்து வேலூா் நோக்கி வந்த ஆம்னி பேருந்துகளை சோதனையிட்டனா். அப்போது, ஒரு ஆம்னி பேருந்தின் நம்பா் பிளேட்டில் இருந்த பதிவெண்ணும், சான்றிதழில் இருந்த பதிவெண்ணும் வேறுபட்டிருப்பது தெரியவந்தது.
பதிவெண்ணை சோதனையிட்டபோது, அந்த பதிவு எண் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சோ்ந்த ஒருவா் பேருந்தை விலைக்கு வாங்கி போலியாக தமிழக பதிவெண் ஸ்டிக்கா் ஒட்டி கடந்த 3 ஆண்டுகளாக தினமும் ஆந்திரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பயணிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.
போலியாக தமிழக பதிவெண் பயன்படுத்தி பேருந்தை இயக்கியதால் மாதம் ரூ. 3 லட்சம் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. எனவே, போலி பதிவெண் கொண்ட பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து, பேருந்தின் உரிமையாளா் யாா் எனக் கண்டறிந்து அவருக்கு 100 சதவீத வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், இதேபோல் தமிழகத்தில் ஏராளமான போலி பதிவெண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுவதால், இனி அனைத்து ஆம்னி பேருந்துகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.