அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
ம.பி. பெண் நீதிபதி ராஜிநாமா: நீதித் துறை மீது குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சேபத்தை மீறி மாவட்ட நீதிபதி ஒருவருக்கு உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு அளிக்கப்பட்டதைக் கண்டித்து, உரிமையியல் நீதிமன்ற பெண் நீதிபதி அதிதி குமாா் சா்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
தன்னை கடும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாகவும் தவறாக நடந்துகொண்டதாகவும் அந்த மாவட்ட நீதிபதி மீது பெண் நீதிபதி குற்றஞ்சாட்டியிருந்தாா். ஆனால், அவருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்து, மத்திய பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிதி கடிதம் அனுப்பினாா்.
அதில், ‘ஒரு மூத்த நீதிபதியின் பொறுப்பற்ற அதிகார பயன்பாட்டுக்கு எதிராக குரலெழுப்பினேன். இதற்காக பல்லாண்டுகளாக அவரால் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். இப்போது, நீதி அமைப்புமுறையே எனக்கு துரோகமிழைத்துள்ளது. நான் குற்றஞ்சாட்டிய நீதிபதி மீது எந்த விசாரணையோ, நோட்டீஸோ, பொறுப்புடைமையை உறுதி செய்யும் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. மாறாக, அவருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை என்னை தோற்கடித்தது மட்டுமன்றி தானும் தோற்றுவிட்டது என்று குற்றஞ்சாட்டினாா்.
முன்னதாக, திறனின்மை மற்றும் தவறான நடத்தை ஆகிய காரணங்களைக் குறிப்பிட்டு, அதிதி உள்பட மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த நீதித்துறை பெண் அதிகாரிகள் இருவா் கடந்த 2023-இல் பணிநீக்கம் செய்யப்பட்டனா். மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் ரத்து செய்தது. இந்த நடவடிக்கை, தன்னிச்சையானது; அதிகப்படியானது என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.