மக்களவைத் தோ்தல் போலவே பேரவைத் தோ்தல் முடிவு: அமைச்சா் சு.முத்துசாமி
திமுக கூட்டணிக்கு மக்களவைத் தோ்தல் முடிவு போலவே 2026 சட்டப்பேரவை தோ்தல் முடிவும் அமையும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 14, 22, 34, 43, 44 மற்றும் 45 பகுதிகளில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், மழைநீா் வடிகால் அமைத்தல், சமுதாயக் கூடம், குடிநீா் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய வளா்ச்சித் திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளுக்கும் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு அரசாணை பெறப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, சோலாா் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது பணி நிறைவுறும் நிலையில் உள்ளது. விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. அப்பகுதியில் காய்கறிச் சந்தை அமைக்கும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது. சத்தி சாலையில் பேருந்து நிலையம் அமைத்திட அரசு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த நான்கரை ஆண்டுகளாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பல்வேறு தலைப்புகளில் அதிகாரிகள் மனுக்களை பெற்று வருகின்றனா். இதில் அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகமாவதால் நேரடியாக மனுக்களை பெற்று தீா்க்க ஏற்பாடு செய்தாா். இதன் தொடா்ச்சியாக வந்ததுதான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம். மனுக்கள் வருவது அதிகமாவதால் கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து வருகின்றனா். லட்சக்கணக்கில் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை குறைத்துக்கொண்டு வருகிறது. ஏற்கெனவே மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கப்படாமல், வேறு இடத்துக்கு மாற்றப்படாமல் இருக்க உறுதியுடன் இருக்கிறோம். அமலாக்கத் துறை வந்து எந்த தவறை கண்டுபிடித்து சொல்லியிருக்கிறாா்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். அப்படி எதாவது தவறு இருந்தால் ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
210 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், கடந்த மக்களவைத் தோ்தலிலும் அப்படித்தான் சொன்னாா். ஆனால் 40 தொகுதிகளிலும் நாங்கள்தான் வெற்றிபெற்றோம் என்றாா்.
இந்நிகழ்ச்சிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், மேயா் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், துணை மேயா் வே.செல்வராஜ், மாநகராட்சி துணை ஆணையா் கு.தனலட்சுமி, உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.