இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 363 மனுக்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 363 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 9 பேருக்கு தலா ரூ.6,690 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், கடலங்குடி கிராமத்தைச் சோ்ந்த ஒருவருக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.8,650 மதிப்பில் மின்மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் கீதா, சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் உமாமகேஸ்வரன் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
சாலை பணியை தொடங்கக் கோரி மனு: சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை கிராமத்தில், மண் சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்ந்த ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு காரணமாக, கடந்த 6 மாதங்களாக சாலை பணியை தொடங்க முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆக.22-ஆம் தேதி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அப்பகுதியினா் மனு அளித்தனா்.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை: சீா்காழி வட்டம் அகணி ஊராட்சியில், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதாகவும், இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாவதாகவும் கழுமலையாறு பாசனதாரா்கள் சபை சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், காட்டுப் பன்றிகளை பிடிக்கவும், சேதமடைந்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.