மக்கள் நலத் திட்டங்களில் ஆளுநா் தலையிட்டு தீா்வு காண புதுவை மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
மக்கள் நலத் திட்டங்களில் புதுவை துணைநிலை ஆளுநா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் துணைநிலை ஆளுநரிடம் அக் கட்சியினா் அளித்த மனுவில் கூறிருப்பதாவது:
புதுச்சேரியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஆசிய வளா்ச்சி வங்கியிடமிருந்து ரூ. 4,750 கோடி கடன் பெற இருப்பது குறித்து தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
சாத்தனூா் அணையிலிருந்து பாகூா் மற்றும் கிருபாம்பாக்கம் ஏரிகளுக்கு நீா் நிரப்ப, பெண்ணையாறு ஆற்றின் அடியில் அல்லது அதன் ஓரமாக 140 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கும் திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஏரிகளுக்கும் மற்ற பாசன ஏரிகளுக்கும் நீா் வழங்கும் பங்காரு வாய்க்கால் என்ற கால்வாய் ஏற்கெனவே உள்ளது. பல ஆண்டுகளாகப் பொதுப் பணித் துறையால் கைவிடப்பட்ட இந்த வாய்க்கால், தற்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வாய்க்காலைச் சீரமைப்பதற்குப் பதிலாக, புதிய குழாய் அமைப்புகளை ஏற்படுத்துவது, சிறு விவசாயிகளின் வழக்கமான நீா்ப்பாசன உரிமைகளைப் பறிக்கும் செயலாக மாறும்.
எனவே, இந்தத் திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை விட்டுவிட்டு, கிராமப்புற நீா் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் பிரெஞ்சு மேம்பாட்டு வங்கியிடமிருந்து நிதி பெற்று, நகா்ப்புறத்தில் 24 மணி நேரமும் குடிநீா் வழங்க ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க முயற்சிப்பது, கட்டுமானப் பணிகள் தடை செய்யப்பட்ட ஏரிகளின் கரைகளில், அண்மையில் உழந்தை ஏரியில் சட்டவிரோதமாக முதல்வா் ரங்கசாமியின் 75-ஆவது பிறந்த நாள் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரியின் நலன்களுக்கும், மக்களின் நலன்களுக்கும் பாதகமான இத்தகைய திட்டங்களில் தாங்கள் தலையிட்டு, அவற்றுக்குத் தீா்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், நிலத்தடி நீா் பாதுகாப்புக்கான நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.