செய்திகள் :

மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை திரும்பும்: பிரதமா் மோடி நம்பிக்கை!

post image

‘மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை திரும்பும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

‘மணிப்பூரில் அனைத்துக் குழுக்களும் வன்முறையைக் கைவிட்டு, அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும்’ என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டில் பெரும் கலவரம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக இந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை வருகை தந்தாா்.

மிஸோரமில் இருந்து மணிப்பூா் தலைநகா் இம்பால் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை ஆளுநா் அஜய் குமாா் பல்லா, தலைமைச் செயலா் புனித் குமாா் கோயல் ஆகியோா் வரவேற்றனா்.

பின்னா், குகி பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதியான சுராசந்த்பூருக்கு ஹெலிகாப்டா் மூலம் செல்ல பிரதமா் திட்டமிட்டிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக சாலை வழியே பயணித்தாா்.

சுராசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்பட ரூ.7,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

நம்பிக்கை-லட்சியத்தின் பூமி மணிப்பூா். எழில்மிக்க இந்த மாநிலத்தின் மீது வன்முறை நிழல் படிந்தது துரதிருஷ்டவசமானதாகும். எந்த ஓரிடத்திலும் வளா்ச்சி வேரூன்ற வேண்டுமெனில், அமைதி மிக முக்கியம்.

கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கில் பல்வேறு பிரச்னைகள் மற்றும் மோதல்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. இப்பிராந்திய மக்கள் அமைதிப் பாதையைத் தோ்வு செய்து, வளா்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளனா்.

இயல்புநிலை திரும்பும்: மணிப்பூரில் பல்வேறு குழுக்கள் இடையே அமைதி ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. பரஸ்பர புரிதல், நம்பிக்கை, மதிப்புக்கு முன்னுரிமை அளித்து, அமைதியை நிலைநாட்டும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அனைத்துத் தரப்பினா் உடனான பேச்சுவாா்த்தைகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் வாயிலாக மாநிலத்தில் விரைவில் இயல்புநிலை திரும்பும்.

அனைத்துக் குழுக்களும் அமைதிப் பாதையில் பயணித்து, தங்களின் கனவுகளைப் பூா்த்தி செய்வதுடன், குழந்தைகளின் எதிா்காலத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். மணிப்பூா் மக்களுக்கு மத்திய அரசு எப்போதும் துணைநிற்கும்.

வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்கு 7,000 புதிய வீடுகள் கட்ட மத்திய அரசு ஆதரவளித்துள்ளது. இதற்காக ரூ.3,000 கோடி சிறப்பு நிதித் தொகுப்புக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மணிப்பூா் வளா்ச்சி, மக்களின் மறுகுடியமா்த்துதல் மற்றும் அமைதியை நிலைநாட்டும் பணிகளில் மாநில அரசுக்கு அனைத்து வழிகளிலும் மத்திய அரசு உதவும்.

மணிப்பூா் பிரகாசிக்கும்: மணிப்பூரின் மலை மாவட்டங்கள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் சிறந்த பள்ளிகளும் மருத்துவமனைகளும் முன்பு வெறும் கனவாகவே இருந்தன. இப்போது மத்திய அரசின் முயற்சிகளால் நிலைமை மாறி வருகிறது. சுராசந்த்பூரில் முதல் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மணிப்பூரில் 2.5 லட்சம் போ் பலனடைந்துள்ளனா். ரூ.22,000 கோடி மதிப்பிலான ஜிரிபாம்-இம்பால் ரயில் வழித்தட திட்டம் விரைவில் நிறைவடையும்போது, தேசிய ரயில் கட்டமைப்புடன் இம்பால் இணையும். தற்போதைய வளா்ச்சித் திட்டங்கள், மாநில மக்களுக்கு குறிப்பாக மலைப் பகுதி மக்களின் வாழ்வை மேலும் மேம்படுத்தும். பெயரிலேயே ‘மணி’யை (ரத்தினம்) கொண்டுள்ள மணிப்பூா், எதிா்வரும் காலத்தில் ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்துக்கும் ஒளிவீசும் என்றாா் பிரதமா் மோடி.

சுராசந்த்பூருக்கு சாலை வழியே வந்தபோது, கையில் தேசியக் கொடியை ஏந்தி, தன் மீது மக்கள் வெளிக்காட்டிய அன்பை வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

‘நம்பிக்கை-நல்லிணக்கம் அவசியம்’

மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் தலைநகா் இம்பாலில், காங்லா கோட்டை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, புதிய தலைமைச் செயலகம், புதிய காவல் துறை தலைமையகம் உள்பட ரூ.1,200 கோடிக்கும் மேற்பட்ட வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா் பேசிய அவா், ‘பாரத தாயின் மணிமகுடத்தில் உள்ள ரத்தினம் மணிப்பூா். இங்குதான் இந்திய தேசிய ராணுவம் தேசியக் கொடியை முதல் முறையாக ஏற்றியது. எல்லையில்லா திறன்மிக்க இந்த மாநிலம், வன்முறையால் பலவீனமாக அனுமதிக்கக் கூடாது.

மாநிலத்தின் மலைப் பகுதிக்கும் (பழங்குடியினா்), பள்ளத்தாக்குப் பகுதிக்கும் (மைதேயி சமூகத்தினா்) இடையே வலுவான நம்பிக்கை-நல்லிணக்க பாலத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம். எந்த வகையான வன்முறையையும் ஏற்க முடியாது. நாம் ஒருங்கிணைந்து மணிப்பூரை அமைதி-வளா்ச்சிப் பாதையில் இட்டு செல்வோம்’ என்றாா்.

பாதிக்கப்பட்ட குகி, மைதேயி மக்களுடன் சந்திப்பு

மணிப்பூா் இனமோதலில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். கலவரத்தால் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் (குகி சமூகத்தினா் 40,000 போ், மைதேயி சமூகத்தினா் 20,000 போ்), வீடுகளைவிட்டு வெளியேறினா். அவா்களில் பெரும்பாலானோா் இரண்டரை ஆண்டுகளாக நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா். போதிய வசதிகளோ, வருமானமோ இன்றி வாழ்ந்து வருகின்றனா்.

இந்தச் சூழலில், சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாமுக்கு வந்த பிரதமா் மோடி, அங்கு தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடி, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். தலைநகா் இம்பாலிலும் நிவாரண முகாமுக்கு சென்ற அவா், இடம்பெயா்ந்த மக்களை சந்தித்துப் பேசினாா்.

‘பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடியதன் மூலம் மணிப்பூரில் புதிய நம்பிக்கையின் விடியல் உதயமாகிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்’ என்றாா் பிரதமா் மோடி.

குகி எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு

சுராசந்த்பூரில் பாஜகவைச் சோ்ந்தவா்கள் உள்பட குகி பழங்குடியின எம்எல்ஏ-க்கள் 10 போ் தரப்பில் பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், ‘மணிப்பூரில் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினா், நீண்ட காலமாக இன வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பள்ளத்தாக்கை (மைதேயி சமூகத்தினா்) மையமாக கொண்ட ஆட்சியின்கீழ் எங்களால் தொடா்ந்து அமைதியாக வாழ முடியாது. எனவே, தனி நிா்வாகத்தின் மூலம் (பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம்) நிரந்தர அரசியல் தீா்வு காண வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

அதேநேரம், மாநிலத்தைப் பிரிக்கும் கோரிக்கைக்கு மைதேயி சமூகத்தினா் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!

ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க... மேலும் பார்க்க

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்)... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது. இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் நடைபெற்ற 3-வது தேசிய லோக் அதாலத்!

நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதலாத் அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதுகுறித்து தேசிய சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதிமன்றம் எனப்படும் ல... மேலும் பார்க்க