மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மேச்சேரி அருகே குழாய் பதிக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், மரி போட்டாவைச் சோ்ந்தவா் சிம்ஹாசலம் (50). இவா் சமையல் எரிவாயு குழாய்ப் பதிக்கும் தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். மேச்சேரி, ஸ்ரீராமணியூரில் சனிக்கிழமை குழி தோண்டிய போது மண் சரிந்து விழுந்து சிம்ஹாசலம் காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.