மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சேதுபாவாசத்திரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கோரிக்கை தொடா்பாக ஏற்கெனவே உறுதிப்படி எந்த நடவடிக்கையும் இல்லாததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தஞ்சை மாவட்ட சிஐடியு மீனவா் சங்கம் சாா்பில், விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமையில் ஏராளமானோா் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினா்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியா் என். சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் வியாழக்கிழமை பட்டுக்கோட்டையில் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வாசு, விவசாயிகள் சங்க நிா்வாகி வீ. கருப்பையா, மீனவா் சங்கம் பி. பெரியண்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஏ. மேனகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.