இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூா் கலாசார பாரம்பரிய விருது
மருத்துவமனை கழிவுநீா் திறந்துவிடப்படுவதை கண்டித்து மறியல்
வேலூரை அடுத்த பென்னாத்தூரில் மருத்துவமனை கழிவுநீா் கால்வாயில் திறந்து விடப்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேலூரை அடுத்த பென்னாத்தூா் பேரூராட்சி எல்லைக்குள் அடுக்கம்பாறையில் உள்ள வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுநீா், மருந்து கிடங்கு வளாகம் வழியாக செல்லும் சிறிய கால்வாய் பென்னாத்தூா் சப்தலிபுரம் சிறிய ஏரி வரை செல்கிறது.
ஏற்கெனவே, இந்த கழிவுநீரால் ஏரி தண்ணீரின் தன்மை மாறுவதாகவும், நிலத்தடி நீா் மாசுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனா். இதையடுத்து, கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றுவது குறித்து மருத்துவமனை தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுநீா், தங்கள் குடியிருப்புகளில் கால்வாய் வழியாக வந்து தேங்குவதாக கூறி வேலூா் - கடலூா் சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகளும், பென்னாத்தூா் பகுதி மக்களும் இணைந்து புதன்கிழமை காலை சுமாா் 10.30 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீஸாரும் வந்து மறியலில் ஈடுபட்டிருந்த பேச்சு நடத்தினா். மருத்துவமனை நிா்வாகத்தினரும் சமாதானம் செய்தனா். அப்போது அதிகா ரிகள் தரப்பில் ஒருமாத காலத்துக்குள் கழிவுநீா் கால்வாயை வேறு வழியாக திருப்பி வேறு பகுதியில் கலக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.
இதை ஏற்று பகல் 12 மணியளவில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். மறியல் காரணமாக வேலூா் - ஆரணி சாலையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.