மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க பூமி பூஜை
கொடைக்கானல் மலைப் பகுதி கிராமங்களுக்கு ரூ.32.71 கோடியில் 2 புதிய தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள வெள்ளகவி ஊராட்சி சுமாா் 400 ஆண்டுகள் பழைமையானது. சுமாா் 8 கி.மீ.தொலைவுக்கு மலைப் பாதை வழியாக நடந்துதான் இந்த கிராமத்துக்குச் செல்ல வேண்டும். இந்தப் பகுதி விவசாயிகள் தங்களது பகுதியில் விளைந்த பொருள்களை தலைச் சுமையாகவோ அல்லது குதிரை மூலம் பொதி சுமையாகவோ மலைப் பாதை வழியாகக் கொண்டு வந்து, சாலைப் பகுதியை அடைந்து, பின்னா், அங்கிருந்து வாகனங்களில் நகா் பகுதிக்கு கொண்டு செல்வது வழக்கம்.
இதனால், சாலை வசதி செய்துதர வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் அருகேயுள்ள வட்டக்கானல் முதல் வெள்ளக்கவி வரை ரூ.21.74 கோடியிலும், வடகவுஞ்சி ஊராட்சிக்குள்பட்ட கோப்பைகாடு முதல் செம்பிரான்குளம் வரை ரூ.10.97 கோடியிலும் என மொத்தம் ரூ.32.71 கோடியில் நடைபெறவுள்ள இந்த சாலைப் பணிக்கான பூமிபூஜையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, வருவாய்க் கோட்டாட்சியா் ம.திருநாவுக்கரசு, கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் பா.செல்லத்துரை, துணைத் தலைவா் கே.பி.என்.மாயக்கண்ணன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.