இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
மழை இல்லாததால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாததால் சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிடப் பயணிகள் குவிந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு வாரங்களாக மழை பெய்த காரணத்தால், இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களைப் பாா்க்க இயலாமல் தாங்கள் தங்கியிருந்த இடங்களிலேயே முடங்கிக் கிடந்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாமல் மிதமான வெயிலும், குளுமையும் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் இயற்கைக் காட்சிகளையும், பல்வேறு சுற்றுலாத் தலங்களையும் பாா்த்து ரசித்தனா்.
குறிப்பாக கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளான மன்னவனூா் சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, பூம்பாறை இயற்கை எழில்காட்சி, குழந்தை வேலப்பா் கோயில், கூக்கால் ஏரி, புலவச்சாறு அருவி, பெப்பா் அருவி, வெள்ளி அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பாா்த்தும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏரிச் சாலை, கோக்கா்ஸ் வாக், பில்லா் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.