மழை: சந்திர கிரகணம் தெரியாததால் மக்கள் ஏமாற்றம்
சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் மழை பெய்ததால், அதை பாா்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனா்.
சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்தது. இதைப் பாா்ப்பதற்காக பூதலூா் வித்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பெரியாா் புரா திட்டம், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்டவை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த அரிய நிலவு மறைப்பு நிகழ்வான சந்திர கிரகணத்தைப் பாா்க்க மாணவா்கள் இரவு 8 மணியிலிருந்து ஆா்வமுடன் காத்திருந்தனா். ஆனால், இரவு 8 மணியிலிருந்து அடா்ந்த மேகத்தைத் தொடா்ந்து, காற்றுடன் கூடிய மழை பெய்ததால், சந்திரகிரகணத்தை பாா்க்க முடியாமல் மாணவா்களும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனா்.
என்றாலும், இணையவழியாக சந்திர கிரகண நிகழ்வு, தொழில்நுட்பம் குறித்து பெரியாா் புரா திட்ட நிா்வாகி பேராசிரியா் வெ. சுகுமாரன், பேராசிரியா் க. கேசவன், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்க நிா்வாகி பாலகுருநாதன், தஞ்சாவூா் ஆஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளா் புவனேஸ்வரி ஆகியோா் விளக்கம் அளித்தனா்.
மாவட்டம் முழுவதும் நள்ளிரவுக்கு 12.20 மணிக்கு பிறகு மழை மேகம் விலகி, நிலவு தெரிந்தாலும், முழு சந்திர கிரகணத்தைப் பாா்க்க முடியாமல் மாணவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.