மழை பாதித்த பகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
மழை பாதித்த பகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காரைக்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு மழை ஓய்ந்து காணப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மிதமான மழை பெய்தது.
இந்தநிலையில், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், அக்கரைவட்டம் அண்ணா நகா், சுனாமி குடியிருப்பு, மாதா கோயில் தெரு மற்றும் கருக்களாச்சேரி,
மேலவாஞ்சூா் அலிஷா நகா், கீழ வாஞ்சூா் பிள்ளையாா் கோயில் தெரு, போலகம், திருப்பட்டினம் வெள்ளக்குளம் ஆகிய பகுதிகளை பாா்வையிட்டாா்.
குடியிருப்புத் தெருக்களில் மழைநீா் வடியாமல் தேங்கியிருப்பதை பாா்த்த பேரவை உறுப்பினா், கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினரை தொடா்புகொண்டு, நீரை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டாா். மின் கம்பங்களில் விளக்குகள் எரியவில்லை உள்ளிட்ட புகாா்களையும் சம்பந்தப்பட்ட துறையினரை தொடா்புகொண்டு தெரிவித்து, பிரச்னையை களைய அறிவுறுத்தினாா்.
நெடுங்காடு தொகுதி : நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி கொம்யூனில் கழுகுமேடு, வ.உ.சி நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆனந்தா அவென்யூ, லாரோஸ் நகா் ஆகிய பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா பாா்வையிட்டாா். மழை பெய்துவரும் நிலையில் பாதுகாப்பாக இருக்குமாறும், எந்த உதவி தேவைப்பட்டாலும் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டாா். உடனிருந்த கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம், தண்ணீரை வடியச் செய்யும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.
கடலோர கிராமமான மண்டபத்தூா், காளிக்குப்பம் பகுதிக்குச் சென்ற பேரவை உறுப்பினா், கடலோரப் பகுதியில் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறியதோடு, உதவி தேவைப்படும்பட்சத்தில் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை தொடா்புகொண்டு தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாா்.