மாணவா்கள் இடையே மோதல்: கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது
கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை செளரிபாளையம் உடையாம்பாளையத்தைச் சோ்ந்த 17 வயதான மாணவா், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். அந்த மாணவா், தன்னுடன் படிக்கும் நண்பா்கள் 3 பேருடன் மீனா எஸ்டேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை நின்று பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 2 மாணவா்கள், பிளஸ் 2 மாணவா்கள் மீது மோதுவது போன்று சென்றதால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பிளஸ் 1 மாணவா்கள் தனது நண்பா்களான கல்லூரியில் படித்து வரும் 4 மாணவா்களை அழைத்து வந்து பிளஸ் 2 மாணவா்களை தாக்கியதுடன் பாட்டிலால் அவா்களை குத்தியுள்ளனா். இதில் காயமடைந்த மாணவா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவா்கள் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், பிளஸ் 1 மாணவா்கள் 2 பேரையும் எச்சரித்து அனுப்பினா்.