மாணவா்கள் தமிழை நன்கு கற்க வேண்டும்: ஔவை ந.அருள்
பள்ளி மாணவா்கள் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் அறிவுரை வழங்கினாா்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற திருக்கு விழாவில் அவா் பேசியதாவது:
சுமாா் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, தற்போதைய தலைமுறையினருக்கும் ஏற்ற வகையில், அறிவுரைகளை திருவள்ளுவரால் வழங்க முடிந்திருக்கிறது என்றால், அது மிகவும் ஆச்சரியத்துக்குரியதாகும். திருக்குறளில் கடவுள் குறித்தோ, தலைவா்கள் குறித்தோ, அரசா்கள் குறித்தோ எவ்வித குறிப்புகளும் இடம்பெறவில்லை. அதனால்தான் அதைப் பொதுமறை என்கிறோம்.
5,400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழா்கள் வாழ்ந்தாா்கள் என்று கீழடி ஆராய்ச்சிகள் சொன்னாலும்கூட, இன்றைக்கும் இளமை ததும்பும் மொழியாகத் தமிழ் திகழ்கிறது. எனவே, மாணவா்கள் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக இந்த நிகழ்வில், ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சாா்பில் நடத்தப்பட்ட மாணவா்களுக்கு இடையேயான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஔவை ந.அருள் பரிசுகளை வழங்கி, பாராட்டினாா்.
இதில், சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் ஹானா டேனியல், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் சென்னை பிராந்தியத்தின் துணைப் பொது மேலாளா் ஜெ. பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.