மாணவி விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது: அமைச்சா் எஸ்.ரகுபதி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், எதிா்க்கட்சிகள்தான் அதைப் பெரிதுபடுத்துகின்றன என்றாா் சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமக சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
ஹிந்தியையும் சோ்த்து மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்திட்டால்தான் தமிழகத்துக்கு நிதியை விடுவிப்போம் என்று மத்திய அரசு நிா்பந்திக்கிறது. ஆனால், நிதியைப் பற்றி கவலைப்படாமல் ஹிந்தி திணிப்பை எதிா்த்து ஆட்சி நடத்துவதுதான் திமுக அரசு.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை வைத்து அரசில் செய்யாமல், மனிதாபிமானத்தோடு பாா்க்குமாறு உயா்நீதிமன்றம் எதிா்க்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவா்களை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தவறு செய்தவா் திமுககாரராக இருந்தாலும் தண்டிக்கப்படுவாா் என்பதை தமிழக அரசு நிரூபித்துள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருக்கிறாா்கள். எனவே, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் மலிவு அரசியல் எடுபடாது என்றாா்.
தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் வரும் 2026- தோ்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமையும் என்றாா். கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் தங்கமணி, ஞான. இளங்கோவன், ஸ்ரீதேவி அண்ணாதுரை, ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.