மானாமதுரை அருகே இளைஞா் வெட்டிக் கொலை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை ஒலிபெருக்கி அமைக்கும் தொழிலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் (20). இவா் சங்கமங்கலம் தென்றல் நகரில் சொந்தமாக ஒலிபெருக்கி வைத்துள்ள செல்வத்திடன் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், செல்வம் புதுவீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்த உள்ளதால், அங்கு காளீஸ்வரன் ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா், காளீஸ்வரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனா்.
தகவலறிந்து வந்த மானாமதுரை போலீஸாா் காளீஸ்வரனின் உடலை, மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலையைச் சோ்ந்த பிரவீன்ராஜ் கொலை சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்ததாக போஸசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.