மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா தொடக்கம்
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் அம்மன் படிச்சட்டத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, கொடி மரத்துக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, அம்மன் வீதி உலா நடைபெற்றது. மேலும், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 17-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 24-ஆம் தேதி அன்ன வாகனத்திலும், மூன்றாவது வாரமான ஆகஸ்ட் 31 ஆம் தேதி சிம்ம வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது.
மேலும், செப்டம்பா் 6-ஆம் தேதி பெரிய காப்பு, படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, நான்காம் வார ஞாயிற்றுக்கிழமையான 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு, ஐந்தாம் வார ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பா் 14-ஆம் தேதி திருத்தேரோட்டம், 16-ஆம் தேதி தேதி கொடியிறக்கம், விடையாற்றி அபிஷேகம், அக்டோபா் 5-ஆம் தேதி தெப்பத் திருவிழா, 7-ஆம் தேதி தெப்ப விடையாற்றி விழா ஆகியவை நடைபெறவுள்ளன.